Friday, August 16, 2013

"வினை விதைப்போம் "

உலகத்தை காப்பாற்ற வந்த ரட்சகனாய் எண்ணி மகிழ்ந்தார்கள். விமானங்களில் இருந்து பூமியில் தூவி பூமியையே காப்பாற்றிவிட்டதாக பெருமிதப்பட்டார்கள். வாகனங்களில் அதன் கலவையை இன்றைய கொசு மருந்து அடிக்கும் முறையில் ஊரெல்லாம் அடித்து வைத்தார்கள் . அதன் புகையை அடிக்கும் கருவியில் தலையில் இருந்து கால்வரை காண்பித்து நோயில் இருந்து தப்பித்ததாக நினைத்து மகிழ்ந்தார்கள். மலேரியா மற்றும் டைபாய்ட் நோய் காய்ச்சலில் இருந்து விடுப்பட்டதாய் நிம்மதி அடைந்தார்கள்.DDTயை பார்த்து  பயந்த கென்யா நாட்டை சேர்ந்த பழங்குடி மக்களுக்கு  மக்களுக்கு DDT தெளித்த நீரை உட்கொண்டு கூட செயல்முறை காண்பிக்கப்பட்டது .
மேற்கண்ட அனைத்தும் நடந்தது 1962 இல் " Silent Spring " என்ற நூலின் மூலம்  ரேச்சல் கார்சன்  ( Rachel Carson ) என்ற அமெரிக்க கடலியல் வல்லுநர் உண்மைகளை  வெளிப்படுத்தும்வரை . அதன்பின் உலகம் விழித்தெழுந்து பயன்பாட்டிற்கு முழுவதுமாக தடை செய்தது. என்றாலும் அதன் பாதிப்புகள் இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு மனிதர்களை மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களையும் தாக்கி இன்று வாழ்க்கைக்கு மிகுந்த பயத்தை காட்டும் DDT யை பற்றிதான் இந்த "வினை விதைப்போம் "முதல் பகுதி.

கொஞ்சம் "DDT" என்பது பற்றி பார்ப்போமா ...DDT என்று சுருக்கமாக அழைக்கப்படும் வேதிகலவையின் முழு பெயர் டைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோஈத்தேன் ( Trichloro Diphenyl Trichloroethene ). நிறமற்ற, சுவையற்ற உப்பு படிவம் போன்றது இந்த DDT .1874இல் சோதனைச்சாலையில் அறியப்பட்டாலும் அதன் பயன்பாடு பற்றி 1939வரை யாரும் அறிந்திருக்கவில்லை. 1938 இல் சுவிட்சர்லாந்து வேதியியல் வல்லுநர் "பால் ஹெர்மன் முல்லர் " என்பவர் இதன் பயன்பாட்டை வெளிக்கொண்டு வந்தவர். இதற்காக இவர் 1948இல் மருத்துவம் மற்றும் மனவியல் ஆராய்ச்சிகாக உலகின் மிக உயர்ந்த நோபல் பரிசு பெற்றவர் .
1950களில் DDTயின் பயன்பாடு பயிர்களை தாக்கும் பூச்சிகளிடமிருந்து பயிர்களை காக்கவே உதவியது .பூச்சிகொல்லியாக மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட DDT  1942இல் இருந்து 1972 வரை அமெரிக்காவில் 1.35 மில்லியன் பவுண்டு அளவுக்கு பயன்படுத்தப்பட்டது . அப்போது இந்த DDT யானது முற்றிலும் பாதுகாப்பானது என்று முழுமையாக நம்பியிருந்தனர் மக்கள் .( 2.20 பவுண்டு எடை என்பது 1 கிலோவுக்கு சமம் என்பதால் அதன் பயன்பாட்டை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம் ). ஒரு கிராம் அளவும்,எடையும் கொண்ட DDTயை பத்து மில்லியன் அளவாக பிரித்து வரும் மிகமிகச் சிறிய அளவை 4லிட்டர் நீரில் கரைத்தாலே அதில் வளரும் நுண் உயிரிகள் பாதிக்கப்படும் என்றால் அதன் தீமையை உணரலாம். இதில் உள்ள இன்னொரு அதிர்ச்சியான விஷயம் இவ்வாறு பாதிக்கப்படும் நுண்ணுயிர்கள் பெரும்பாலானவை பொதுவாக இறக்காது மாறாக அவை DDTயை தங்கள் உடலில் சேர்த்துக்கொண்டு அதை கடத்தும் உயிரியாக மாறுகின்றன. உணவு சங்கிலியில் அந்த நுண்ணுயிரியை உணவாக கொள்ளும் உயிரியின் உடலில் சென்று தங்கிவிடுகின்றன.
1970களில் அமெரிக்க பறவைகளின் முட்டையானது அதன் வழக்கமான உறுதித்தன்மை இல்லாமல் கருவிலேயே பறவைகுஞ்சுகளின் இறப்பு அதிகரித்தது . அமெரிக்காவின் தேசிய பறவையான "Bald Eagle " என்றழைக்கபடும் கழுகுகளின் பிறப்பு திடீரென குறைந்தது , அப்பொழுது மேற்கொள்ளப்பட்ட அராய்ச்சிகள் DDT யின் தீமைகளை முதன் முதலாக உலகிற்கு புலப்படுத்தின.பறவைகளின் முட்டை ஓடு உறுதித்தன்மை இல்லாமல் மிக மெல்லியதாக இருந்ததால் பறவைகளின் இனபெருக்கம் மிகவெகுவாக பாதிக்கப்பட்டது.பெரும்பாலான முட்டைகள் உடைந்து கருவிலேயே பறவையின் குஞ்சுகள் இறக்கநேரிட்டது. இதன் தொடர்ச்சியாக 1972இல் அமெரிக்க அரசு DDT யின் உற்பத்தியையும், பயன்பாட்டையும் முழுமையாக தடைசெய்தது.1990களின் மத்தியில் DDTயின் பயன்பாடு அமெரிக்காவில் வருடத்திற்கு 200 மில்லியன் பவுண்டு அளவில் இருந்திருக்கின்றது. 1968களில் இது பற்றிய மேல் ஆராய்சிகளில் ஒரு அமெரிக்கர் சராசரியாக 0.025 மில்லி கிராம் அளவில் ஒரு நாளைக்கு DDT யை பயன்படுத்துவதாக தெரியவந்தபின்னரே அமெரிக்க அரசு அதன் தீமையை உணர்ந்து முற்றிலுமாக தடை செய்தது .

DDTயானது நீரில் கரையாதது...பெட்ரோல் மற்றும் எண்ணெய் பொருட்கள் எவ்வாறு நீரில் கரையாததோ இதுவும் நீரில் கரையாதது . அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் அது (DDTயானது )கொழுப்பில் மட்டுமே கரையும் என்பது. இதன் பொருள் என்னவென்றால் ஒரு விலங்கு இதனை ,அல்லது DDT கலக்கப்பட்ட நீரை உட்கொண்டால் அது அந்த விலங்கின் கொழுப்பில் சென்று சேகரமாகும். மனிதன் பாலுட்டி வகையை சேர்ந்தவன் !!!ஆபத்து விளங்குகிறதா?

கொஞ்சம் சர்க்கரையை நீரில் கரையுங்கள் ...கரையும்..கொஞ்சம் கொஞ்சமாக சர்கரையின் அளவை அதிகப்படுத்துங்கள்...குறிப்பிட்ட அளவு கொண்ட நீரில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் சர்க்கரை கரையும்..மீதமான சர்க்கரை அதன் அடியில் கரையாமல் சேகரமாகி இருக்கும். இதே மாதிரி இந்த DDTயானது விலங்கு மற்றும் மனிதனின் கொழுப்புகளில் கரைந்து கரைந்து அதன் அளவு மீறும் பொழுது அது அந்த கொழுப்பிலேயே சேகரமாகிவிடுகிறது.அப்படி சேகரமாகும் DDT மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. சிறிது காலம் முன்புவரையில் DDTயானது விலங்குகள் மற்றும் மனிதனின் நரம்பு செல்களை மட்டும் பாதிக்கும் என்று தவறாக எண்ணப்பட்டது. இது தவறு என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.

ஒவ்வொரு மனித மற்றும் விலங்குகளின் செல்கள் பிளாஸ்மா சவ்வுகள் ( Plasma  Membrane) 
என்னும் மெல்லிய சுவர்களால் ஆனவை. இந்த பிளாஸ்மா சவ்வுகள் செல்லின் உட்பகுதியையும் வெளிப்பகுதியையும் பிரிக்கும் சுவர் போன்றவை. முட்டையின் ஓடு போன்றவை ஒப்பீட்டு உதாரணத்தில். இந்த பிளாஸ்மா எனப்படும் மெல்லிய தோலின் வேலை என்பது ஒவ்வொரு செல்லுக்கு உள்ளேயும் வெளியேயும் நுழையும்/ வெளியேறும் தகுதி வாய்ந்த பொருட்களை அனுமதிப்பது மட்டுமே. உணவு,ஆக்சிஜன் மற்றும் நீர் ஆகிவற்றை உள்ளேயும் வெளியேயும் அனுமதிப்பது இந்த பிளாஸ்மா. இந்த பிளாஸ்மா என்பது கொழுப்பினால் ஆனது...நினைவில் இருத்துங்கள் DDTயானது  கொழுப்பில் மட்டுமே கரையும்!!!

DDT ஒவ்வொரு செல்லை பாதுகாக்கும் பிளாஸ்மா சவ்வில் கரைந்து செல்லின் சுவர்களை சிறிது திறந்து உள்ளே சென்று தங்கி விடுகிறது. இப்படி செல்லின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் பாதுகாக்கும் பிளாஸ்மா சவ்வில் கரைந்து அந்த சவ்வில் ஏற்படுத்தும் ஓட்டையானது செல்லின் உள்ளே இருக்கும் பொருட்களின் கசிவிற்கு வழிவகுக்கிறது. இந்த செல்லின் சுவர் கசிவானது செல்லின் உள்ளே இருக்கும் சோடியம் அணுக்கள் மற்றும் பொட்டசியம் அணுக்களின் கசிவிற்கு காரணமாகிறது. ஒவ்வொரு அணுவின் துகள்கள் எல்லாம் நேர் (+) Positive  மற்றும் எதிர் (-) Negative சக்தி பெற்றவை. இவை ஒவ்வொன்றும் உடலின் கட்டளையை சம்மந்தப்பட்ட உடலின் உறுப்புகளுக்கு எடுத்து செல்லும் பணியினை செய்பவை. நரம்பு செல்கள் என்பவை சோடியம் (Na+) மற்றும் பொட்டசியம் (K+)
நுண் துகள்களை உள்ளேயும் வெளியேயும் கொண்டவை.

இந்த நரம்பின் செல்களில் சென்று சேகரமாகும் DDTயானது செல்களின் உள்ளே இருக்கும் சோடியம் மற்றும் பொட்டாசியம் அணுக்களின் கசிவிற்கு வழிவகுப்பதால், உடம்பின் உறுப்புகள் உடம்பின் கட்டளைகளை அறியமுடியாமல் போகின்றது. நரம்பின் துடிப்புகளே தசைகளை ஓய்வாகவும் செயல்படும் விதமாகவும் உள்ளதை நமக்கு காட்டுகிறது. இந்த நரம்பு செல்களில் ஏற்ப்படும் பாதிப்பு மிகபெரிய நோய்களை ஏற்படுத்துகின்றன.

எப்போது DDTயின் தாக்கம் அதிகமாகிறதோ அப்போது உயிர் இழப்பு அல்லது வலிப்பு உடனடியாக மனிதனை தாக்குகிறது. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தசை சுருங்குதலும் நிகழ்கின்றது. மேலும் தசைகளை கட்டுபடுத்த முடியாமல் போகின்றது. இப்படி மனித உடலில் உள்ள கொழுப்பில் சேகரமாகும் DDT உடலில் எங்கெங்கு கொழுப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று கொழுப்பில் கரைந்து அதிலேயே சேகரமாகிறது. அட்ரீனல் சுரப்பி ,தைராய்டு சுரப்பிகள் ஆகியன கொழுப்பில்லானவை மேலும் சிறிதளவு மனித சிறுநீரகங்களிலும் சேகரமாகின்றன. ஒரு மனிதனின் எடையில் ஒரு கிலோவிற்கு 256 மில்லிகிராம் அளவு  DDT இருந்தாலே உயிர் இழப்பு தவிர்க்கமுடியாது. மனிதனின்  எடையில் கிலோவிற்கு 6 - 10 மில்லி கிராம் அளவு DDT இருந்தால் தலைவலி,குமட்டல், வாந்தி மற்றும் உடலில் தோன்றும் கட்டிகளுக்கு வழிவகுக்கும். 

சமீப காலமாக பெண்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் மார்பக புற்றுநோய்க்கு DDTயும் முழு முதற்காரணம். தாய்ப்பால் உற்பத்திக்கு மிகவும் அதிகமாக உடலின் கொழுப்பு பயன்படுகிறது. மேலும் கொழுப்பில் மட்டுமே கரையும் DDTயும் அதில் சேகரமாகி இருக்கும் DDTயும் குழந்தைக்கும் கடத்தப்படுகின்றன. குழந்தையின் உடலின் கொழுப்பு பகுதியிலேயும் DDT சேகரமாகின்றது . தாய் வழியாக குழந்தைக்கு பின்பு அதன் பின் சந்ததிக்கு என்று வழிவழியாக இதன் தாக்கம் சென்று கொண்டே இருகின்றது. மிகவும் சுத்தமான தாய்பாலின் வழியாக கடத்தப்படும் ஒரே விஷயம் இந்த DDT மட்டுமே என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.

மனித இனத்தில் குறைபாடுள்ள பிறப்புகளுக்கு DDTயும் முழுமுதல் காரணம்.

மற்ற உயிர்களிடத்தில் DDTயின் தாக்கம் என்னவென்று பார்ப்போமா?

ஒரு பூச்சிக்கொல்லியாக அறிமுகமான இந்த DDT மலேரியாவை தோற்றுவிக்கும் கொசுக்களை கொன்று குவித்தாலும் அதன் பாதிப்புகள் எண்ணிலடங்கா. ஒரு லிட்டர் அளவு நீரில் 0.1 கிராம் அதாவது ஒரு மில்லிகிராம் அளவு DDT இருந்தாலேயே உயிர் வாழ காரணமான சூரிய ஒளிசேர்க்கையை முற்றிலுமாக குலைக்கமுடியும். மிக சிறிய அளவுள்ள DDT பாசிகளையும் நீரில் உள்ள சிறு உயிரினங்களையும் பாதிக்ககூடியதே.

நிலத்தில்  வாழும் ஊர்வனவற்றில் மண்புழு இதன் தாக்கத்தை மீறி வாழும் சக்தி கொண்டது. நீண்ட நாட்களுக்கு அதன் தாகத்தை தாங்கும் சக்தி மண்புழுக்களுக்கு உண்டு. ஆனால் இவற்றின் உடலில் சேகரமாகும் DDT என்பது மண்புழுக்களை உணவாக கொண்ட உயிரிகளை சென்றடையும்.
 
 நீரில் வாழும் உயிரிகள் முழுவதுமாக DD யினால் பாதிக்கப்படுகின்றன. மிக சிறிய உயிரியாக இருந்தாலும் அதன் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சிகளையும் தடுத்து மோசமான விளைவுகளை  உண்டாக்கும் DDT.ஒரு காலத்தில் கடலில் செல்லும் கப்பல்கள் இந்த DDTயை கப்பலின் அடிபகுதியை தாக்கும் நுண்உயிரிகளுக்கு எதிராக பயன்படுத்தின. ஏனெனில் நீரில் வாழும் உயிரிகள் DDTயின் தாக்கத்தில் செத்து மிதந்ததே காரணம்.

மீன் வகை உயிரியில்  மிகபெரும் நோய் விளைவுகளை உண்டாக்க கூடியது  DDT. இதில் சிக்கலான விஷயம் என்னவென்றால் மீனின் எந்தப்பகுதி இந்த DDTயினால் 
பா திக்கபட்டிருகின்றது என்பதை நாம் காண முடியாது. இதை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருகின்றன. சிறிய வகை மீன்கள் DDTயினால் மிகபெரும் அளவிற்கு பாதிக்கப்படுகின்றன.சில வகை மீன்கள் நீரின் வெப்பநிலையில் அதிக பாதிப்புகளை அடைவதில்லை.

கேரளாவின் பெரியாறு ஆற்றில் DDTயின் அளவை கணக்கிட்டபோது 16 வகையான மீனினங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டிருந்தது தெரியவந்தது.

நீரில் வாழும் நுண்உயிரிகள் DDTயின் தாக்கத்தில் அதை உடலில் சேகரிக்கும் கலனாக மாறும்போது அந்த உயிரியை உணவாக கொள்ளும்,உணவு சங்கிலியில் அடுத்த நிலையில் இருக்கும் உயிரிக்கு DDT கடத்தப்பெறுகின்றது.இவ்வாறு உணவு சங்கிலியில் அடுத்த அடுத்த மேல் நிலைகளுக்கு உயிரினங்களால் கடத்தப்பெரும் DDT மேல் நிலையில் இருக்கும் உயிரினங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

உணவு சங்கிலியில் ஆகபெரும் மேல்நிலையில்,கடைசியில் அது முற்றுப்பெறும் இடத்தில்  உள்ள உயிரினம் எது தெரியுமா?

மனித இனம்!

DDT யை பற்றிய உண்மைகள் இன்னும் தொடரும்........