Monday, October 30, 2017


    முன்பனிக் காலங்கள்...


 மன அதிர்வுகளை ஏற்படுத்தியபடி சென்றுகொண்டே இருக்கிறது காலம். நிலையாக நின்று கடந்தவற்றை அசைபோடுவதற்காகவோ ரசிப்பதற்கோ இந்த எந்திரமயமான காலம் அனுமதிப்பதே இல்லை. வலிகளோடு மட்டுமல்லாமல் ஏராளமான  குதூகலங்களோடும் மறைந்துவிட்ட காலங்களை இன்று திரும்பி பார்த்தால் அவை  சொல்லிச்செல்லும் கதைகள் ஏராளம். 

    60 மற்றும் 70 இரண்டு பத்தாண்டுகளிலும் வாழ்ந்தவர்கள் வாழ்க்கை நிறைந்து கிடக்கிறது. நிலவொளியில் பேசிய கதைகள் ஏராளம் அவர்களின் அனுபவங்களில் குவிந்து கிடக்கின்றன. 80களின்  இளைஞர்கள் அவர்களின் வாழ்வியல் கொண்டாட்டங்கள் திரைப்படங்களில் , புத்தகங்களில் நிறைந்து கிடக்கின்றன. 90களின் வாழ்வியல் பதிவுகள் குறைவாகவே பதியப்பட்டு இருக்கின்றன . இந்த கட்டுரை தொடர்ச்சியாக 90களின் வாழ்வியல் குறித்த பதிவாகவே வெளிவரும். மனதின் ஆழத்தில் சென்று கடந்தகால புதையல்களை மெல்ல மீட்டுவரும் ஒரு முயற்சி.

   ஏன் 90களின் வாழ்வியல் ? நிறைய இருக்கிறது சொல்வதற்கு 80களின் வாழ்வியல் மெல்லிசை என்றால் புது நூற்றாண்டின் 2000 வாழ்வியல் அதிரடி சப்தங்களில் மூழ்கியது எனலாம். இந்த இரண்டிற்கும் இடையே யாராலும் கேட்கப்படாத  இசையாக 90 களின் வாழ்வியல் இருந்தது. வாழ்வதற்காக உயிர் வாழ்ந்த 80களுக்கும் , உயிர் வாழ்வதற்க்காக வாழும் 2000களுக்கும் மத்தியில் 90களின் காலம் ஒரு கொண்டாட்டமாகவே இருந்தது. 

  முன்னோடியாக கண்ணால் கண்ட ஒரு வாழ்க்கை இருந்தது எதிர்பாராவிதமாக உலகமயமாக்கலின் தாக்கம் ஒரு சூறாவளியை போல் நின்றும் , மோகினியை போல ஆசை காட்டியும் எதிர்மறித்து நின்றது. ஒரு தலைமுறையின் வாழ்க்கை பாதையின் மாறுதலுக்கு பலியானோம்.  அதில் ஆறுதல் என்னவென்றால் உலகமயமாக்கல் தாக்கத்தின் முன்பு வாழ்க்கையின் அனைத்து கொண்டாட்டங்களும் எங்களுக்கு கிட்டியிருந்தன . பெருமையாக சொல்லலாம் பால்ய பருவத்தில் வாழ்க்கையை வாழ்ந்த கடைசி தலைமுறையின் எச்சங்கள்  90களின் சிறுவர்கள்.


ட்ட பார்த்த நீராயில்லை

இறங்கி நின்றது

இலை தழை புறந்தள்ளி
விலக்க முயன்ற நீராயில்லை
பருகச் சூழ்ந்தது 

இளைப்பாறுகையில்
அள்ள முனைந்த நீராயில்லை
குடித்துத் தீர்த்தது 

-வி. அமலன் ஸ்டான்லி.
"மேய்வதும் மேய்ப்பதும் யாது..." 


ஆழ்மனதிலும் , நினைவுகளிலும் சேகரித்த முத்துக்களோடு சந்திக்கிறேன் விரைவில் .



Friday, August 16, 2013

"வினை விதைப்போம் "

உலகத்தை காப்பாற்ற வந்த ரட்சகனாய் எண்ணி மகிழ்ந்தார்கள். விமானங்களில் இருந்து பூமியில் தூவி பூமியையே காப்பாற்றிவிட்டதாக பெருமிதப்பட்டார்கள். வாகனங்களில் அதன் கலவையை இன்றைய கொசு மருந்து அடிக்கும் முறையில் ஊரெல்லாம் அடித்து வைத்தார்கள் . அதன் புகையை அடிக்கும் கருவியில் தலையில் இருந்து கால்வரை காண்பித்து நோயில் இருந்து தப்பித்ததாக நினைத்து மகிழ்ந்தார்கள். மலேரியா மற்றும் டைபாய்ட் நோய் காய்ச்சலில் இருந்து விடுப்பட்டதாய் நிம்மதி அடைந்தார்கள்.DDTயை பார்த்து  பயந்த கென்யா நாட்டை சேர்ந்த பழங்குடி மக்களுக்கு  மக்களுக்கு DDT தெளித்த நீரை உட்கொண்டு கூட செயல்முறை காண்பிக்கப்பட்டது .
மேற்கண்ட அனைத்தும் நடந்தது 1962 இல் " Silent Spring " என்ற நூலின் மூலம்  ரேச்சல் கார்சன்  ( Rachel Carson ) என்ற அமெரிக்க கடலியல் வல்லுநர் உண்மைகளை  வெளிப்படுத்தும்வரை . அதன்பின் உலகம் விழித்தெழுந்து பயன்பாட்டிற்கு முழுவதுமாக தடை செய்தது. என்றாலும் அதன் பாதிப்புகள் இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு மனிதர்களை மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களையும் தாக்கி இன்று வாழ்க்கைக்கு மிகுந்த பயத்தை காட்டும் DDT யை பற்றிதான் இந்த "வினை விதைப்போம் "முதல் பகுதி.

கொஞ்சம் "DDT" என்பது பற்றி பார்ப்போமா ...DDT என்று சுருக்கமாக அழைக்கப்படும் வேதிகலவையின் முழு பெயர் டைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோஈத்தேன் ( Trichloro Diphenyl Trichloroethene ). நிறமற்ற, சுவையற்ற உப்பு படிவம் போன்றது இந்த DDT .1874இல் சோதனைச்சாலையில் அறியப்பட்டாலும் அதன் பயன்பாடு பற்றி 1939வரை யாரும் அறிந்திருக்கவில்லை. 1938 இல் சுவிட்சர்லாந்து வேதியியல் வல்லுநர் "பால் ஹெர்மன் முல்லர் " என்பவர் இதன் பயன்பாட்டை வெளிக்கொண்டு வந்தவர். இதற்காக இவர் 1948இல் மருத்துவம் மற்றும் மனவியல் ஆராய்ச்சிகாக உலகின் மிக உயர்ந்த நோபல் பரிசு பெற்றவர் .
1950களில் DDTயின் பயன்பாடு பயிர்களை தாக்கும் பூச்சிகளிடமிருந்து பயிர்களை காக்கவே உதவியது .பூச்சிகொல்லியாக மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட DDT  1942இல் இருந்து 1972 வரை அமெரிக்காவில் 1.35 மில்லியன் பவுண்டு அளவுக்கு பயன்படுத்தப்பட்டது . அப்போது இந்த DDT யானது முற்றிலும் பாதுகாப்பானது என்று முழுமையாக நம்பியிருந்தனர் மக்கள் .( 2.20 பவுண்டு எடை என்பது 1 கிலோவுக்கு சமம் என்பதால் அதன் பயன்பாட்டை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம் ). ஒரு கிராம் அளவும்,எடையும் கொண்ட DDTயை பத்து மில்லியன் அளவாக பிரித்து வரும் மிகமிகச் சிறிய அளவை 4லிட்டர் நீரில் கரைத்தாலே அதில் வளரும் நுண் உயிரிகள் பாதிக்கப்படும் என்றால் அதன் தீமையை உணரலாம். இதில் உள்ள இன்னொரு அதிர்ச்சியான விஷயம் இவ்வாறு பாதிக்கப்படும் நுண்ணுயிர்கள் பெரும்பாலானவை பொதுவாக இறக்காது மாறாக அவை DDTயை தங்கள் உடலில் சேர்த்துக்கொண்டு அதை கடத்தும் உயிரியாக மாறுகின்றன. உணவு சங்கிலியில் அந்த நுண்ணுயிரியை உணவாக கொள்ளும் உயிரியின் உடலில் சென்று தங்கிவிடுகின்றன.
1970களில் அமெரிக்க பறவைகளின் முட்டையானது அதன் வழக்கமான உறுதித்தன்மை இல்லாமல் கருவிலேயே பறவைகுஞ்சுகளின் இறப்பு அதிகரித்தது . அமெரிக்காவின் தேசிய பறவையான "Bald Eagle " என்றழைக்கபடும் கழுகுகளின் பிறப்பு திடீரென குறைந்தது , அப்பொழுது மேற்கொள்ளப்பட்ட அராய்ச்சிகள் DDT யின் தீமைகளை முதன் முதலாக உலகிற்கு புலப்படுத்தின.பறவைகளின் முட்டை ஓடு உறுதித்தன்மை இல்லாமல் மிக மெல்லியதாக இருந்ததால் பறவைகளின் இனபெருக்கம் மிகவெகுவாக பாதிக்கப்பட்டது.பெரும்பாலான முட்டைகள் உடைந்து கருவிலேயே பறவையின் குஞ்சுகள் இறக்கநேரிட்டது. இதன் தொடர்ச்சியாக 1972இல் அமெரிக்க அரசு DDT யின் உற்பத்தியையும், பயன்பாட்டையும் முழுமையாக தடைசெய்தது.1990களின் மத்தியில் DDTயின் பயன்பாடு அமெரிக்காவில் வருடத்திற்கு 200 மில்லியன் பவுண்டு அளவில் இருந்திருக்கின்றது. 1968களில் இது பற்றிய மேல் ஆராய்சிகளில் ஒரு அமெரிக்கர் சராசரியாக 0.025 மில்லி கிராம் அளவில் ஒரு நாளைக்கு DDT யை பயன்படுத்துவதாக தெரியவந்தபின்னரே அமெரிக்க அரசு அதன் தீமையை உணர்ந்து முற்றிலுமாக தடை செய்தது .

DDTயானது நீரில் கரையாதது...பெட்ரோல் மற்றும் எண்ணெய் பொருட்கள் எவ்வாறு நீரில் கரையாததோ இதுவும் நீரில் கரையாதது . அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் அது (DDTயானது )கொழுப்பில் மட்டுமே கரையும் என்பது. இதன் பொருள் என்னவென்றால் ஒரு விலங்கு இதனை ,அல்லது DDT கலக்கப்பட்ட நீரை உட்கொண்டால் அது அந்த விலங்கின் கொழுப்பில் சென்று சேகரமாகும். மனிதன் பாலுட்டி வகையை சேர்ந்தவன் !!!ஆபத்து விளங்குகிறதா?

கொஞ்சம் சர்க்கரையை நீரில் கரையுங்கள் ...கரையும்..கொஞ்சம் கொஞ்சமாக சர்கரையின் அளவை அதிகப்படுத்துங்கள்...குறிப்பிட்ட அளவு கொண்ட நீரில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் சர்க்கரை கரையும்..மீதமான சர்க்கரை அதன் அடியில் கரையாமல் சேகரமாகி இருக்கும். இதே மாதிரி இந்த DDTயானது விலங்கு மற்றும் மனிதனின் கொழுப்புகளில் கரைந்து கரைந்து அதன் அளவு மீறும் பொழுது அது அந்த கொழுப்பிலேயே சேகரமாகிவிடுகிறது.அப்படி சேகரமாகும் DDT மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. சிறிது காலம் முன்புவரையில் DDTயானது விலங்குகள் மற்றும் மனிதனின் நரம்பு செல்களை மட்டும் பாதிக்கும் என்று தவறாக எண்ணப்பட்டது. இது தவறு என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.

ஒவ்வொரு மனித மற்றும் விலங்குகளின் செல்கள் பிளாஸ்மா சவ்வுகள் ( Plasma  Membrane) 
என்னும் மெல்லிய சுவர்களால் ஆனவை. இந்த பிளாஸ்மா சவ்வுகள் செல்லின் உட்பகுதியையும் வெளிப்பகுதியையும் பிரிக்கும் சுவர் போன்றவை. முட்டையின் ஓடு போன்றவை ஒப்பீட்டு உதாரணத்தில். இந்த பிளாஸ்மா எனப்படும் மெல்லிய தோலின் வேலை என்பது ஒவ்வொரு செல்லுக்கு உள்ளேயும் வெளியேயும் நுழையும்/ வெளியேறும் தகுதி வாய்ந்த பொருட்களை அனுமதிப்பது மட்டுமே. உணவு,ஆக்சிஜன் மற்றும் நீர் ஆகிவற்றை உள்ளேயும் வெளியேயும் அனுமதிப்பது இந்த பிளாஸ்மா. இந்த பிளாஸ்மா என்பது கொழுப்பினால் ஆனது...நினைவில் இருத்துங்கள் DDTயானது  கொழுப்பில் மட்டுமே கரையும்!!!

DDT ஒவ்வொரு செல்லை பாதுகாக்கும் பிளாஸ்மா சவ்வில் கரைந்து செல்லின் சுவர்களை சிறிது திறந்து உள்ளே சென்று தங்கி விடுகிறது. இப்படி செல்லின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் பாதுகாக்கும் பிளாஸ்மா சவ்வில் கரைந்து அந்த சவ்வில் ஏற்படுத்தும் ஓட்டையானது செல்லின் உள்ளே இருக்கும் பொருட்களின் கசிவிற்கு வழிவகுக்கிறது. இந்த செல்லின் சுவர் கசிவானது செல்லின் உள்ளே இருக்கும் சோடியம் அணுக்கள் மற்றும் பொட்டசியம் அணுக்களின் கசிவிற்கு காரணமாகிறது. ஒவ்வொரு அணுவின் துகள்கள் எல்லாம் நேர் (+) Positive  மற்றும் எதிர் (-) Negative சக்தி பெற்றவை. இவை ஒவ்வொன்றும் உடலின் கட்டளையை சம்மந்தப்பட்ட உடலின் உறுப்புகளுக்கு எடுத்து செல்லும் பணியினை செய்பவை. நரம்பு செல்கள் என்பவை சோடியம் (Na+) மற்றும் பொட்டசியம் (K+)
நுண் துகள்களை உள்ளேயும் வெளியேயும் கொண்டவை.

இந்த நரம்பின் செல்களில் சென்று சேகரமாகும் DDTயானது செல்களின் உள்ளே இருக்கும் சோடியம் மற்றும் பொட்டாசியம் அணுக்களின் கசிவிற்கு வழிவகுப்பதால், உடம்பின் உறுப்புகள் உடம்பின் கட்டளைகளை அறியமுடியாமல் போகின்றது. நரம்பின் துடிப்புகளே தசைகளை ஓய்வாகவும் செயல்படும் விதமாகவும் உள்ளதை நமக்கு காட்டுகிறது. இந்த நரம்பு செல்களில் ஏற்ப்படும் பாதிப்பு மிகபெரிய நோய்களை ஏற்படுத்துகின்றன.

எப்போது DDTயின் தாக்கம் அதிகமாகிறதோ அப்போது உயிர் இழப்பு அல்லது வலிப்பு உடனடியாக மனிதனை தாக்குகிறது. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தசை சுருங்குதலும் நிகழ்கின்றது. மேலும் தசைகளை கட்டுபடுத்த முடியாமல் போகின்றது. இப்படி மனித உடலில் உள்ள கொழுப்பில் சேகரமாகும் DDT உடலில் எங்கெங்கு கொழுப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று கொழுப்பில் கரைந்து அதிலேயே சேகரமாகிறது. அட்ரீனல் சுரப்பி ,தைராய்டு சுரப்பிகள் ஆகியன கொழுப்பில்லானவை மேலும் சிறிதளவு மனித சிறுநீரகங்களிலும் சேகரமாகின்றன. ஒரு மனிதனின் எடையில் ஒரு கிலோவிற்கு 256 மில்லிகிராம் அளவு  DDT இருந்தாலே உயிர் இழப்பு தவிர்க்கமுடியாது. மனிதனின்  எடையில் கிலோவிற்கு 6 - 10 மில்லி கிராம் அளவு DDT இருந்தால் தலைவலி,குமட்டல், வாந்தி மற்றும் உடலில் தோன்றும் கட்டிகளுக்கு வழிவகுக்கும். 

சமீப காலமாக பெண்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் மார்பக புற்றுநோய்க்கு DDTயும் முழு முதற்காரணம். தாய்ப்பால் உற்பத்திக்கு மிகவும் அதிகமாக உடலின் கொழுப்பு பயன்படுகிறது. மேலும் கொழுப்பில் மட்டுமே கரையும் DDTயும் அதில் சேகரமாகி இருக்கும் DDTயும் குழந்தைக்கும் கடத்தப்படுகின்றன. குழந்தையின் உடலின் கொழுப்பு பகுதியிலேயும் DDT சேகரமாகின்றது . தாய் வழியாக குழந்தைக்கு பின்பு அதன் பின் சந்ததிக்கு என்று வழிவழியாக இதன் தாக்கம் சென்று கொண்டே இருகின்றது. மிகவும் சுத்தமான தாய்பாலின் வழியாக கடத்தப்படும் ஒரே விஷயம் இந்த DDT மட்டுமே என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.

மனித இனத்தில் குறைபாடுள்ள பிறப்புகளுக்கு DDTயும் முழுமுதல் காரணம்.

மற்ற உயிர்களிடத்தில் DDTயின் தாக்கம் என்னவென்று பார்ப்போமா?

ஒரு பூச்சிக்கொல்லியாக அறிமுகமான இந்த DDT மலேரியாவை தோற்றுவிக்கும் கொசுக்களை கொன்று குவித்தாலும் அதன் பாதிப்புகள் எண்ணிலடங்கா. ஒரு லிட்டர் அளவு நீரில் 0.1 கிராம் அதாவது ஒரு மில்லிகிராம் அளவு DDT இருந்தாலேயே உயிர் வாழ காரணமான சூரிய ஒளிசேர்க்கையை முற்றிலுமாக குலைக்கமுடியும். மிக சிறிய அளவுள்ள DDT பாசிகளையும் நீரில் உள்ள சிறு உயிரினங்களையும் பாதிக்ககூடியதே.

நிலத்தில்  வாழும் ஊர்வனவற்றில் மண்புழு இதன் தாக்கத்தை மீறி வாழும் சக்தி கொண்டது. நீண்ட நாட்களுக்கு அதன் தாகத்தை தாங்கும் சக்தி மண்புழுக்களுக்கு உண்டு. ஆனால் இவற்றின் உடலில் சேகரமாகும் DDT என்பது மண்புழுக்களை உணவாக கொண்ட உயிரிகளை சென்றடையும்.
 
 நீரில் வாழும் உயிரிகள் முழுவதுமாக DD யினால் பாதிக்கப்படுகின்றன. மிக சிறிய உயிரியாக இருந்தாலும் அதன் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சிகளையும் தடுத்து மோசமான விளைவுகளை  உண்டாக்கும் DDT.ஒரு காலத்தில் கடலில் செல்லும் கப்பல்கள் இந்த DDTயை கப்பலின் அடிபகுதியை தாக்கும் நுண்உயிரிகளுக்கு எதிராக பயன்படுத்தின. ஏனெனில் நீரில் வாழும் உயிரிகள் DDTயின் தாக்கத்தில் செத்து மிதந்ததே காரணம்.

மீன் வகை உயிரியில்  மிகபெரும் நோய் விளைவுகளை உண்டாக்க கூடியது  DDT. இதில் சிக்கலான விஷயம் என்னவென்றால் மீனின் எந்தப்பகுதி இந்த DDTயினால் 
பா திக்கபட்டிருகின்றது என்பதை நாம் காண முடியாது. இதை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருகின்றன. சிறிய வகை மீன்கள் DDTயினால் மிகபெரும் அளவிற்கு பாதிக்கப்படுகின்றன.சில வகை மீன்கள் நீரின் வெப்பநிலையில் அதிக பாதிப்புகளை அடைவதில்லை.

கேரளாவின் பெரியாறு ஆற்றில் DDTயின் அளவை கணக்கிட்டபோது 16 வகையான மீனினங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டிருந்தது தெரியவந்தது.

நீரில் வாழும் நுண்உயிரிகள் DDTயின் தாக்கத்தில் அதை உடலில் சேகரிக்கும் கலனாக மாறும்போது அந்த உயிரியை உணவாக கொள்ளும்,உணவு சங்கிலியில் அடுத்த நிலையில் இருக்கும் உயிரிக்கு DDT கடத்தப்பெறுகின்றது.இவ்வாறு உணவு சங்கிலியில் அடுத்த அடுத்த மேல் நிலைகளுக்கு உயிரினங்களால் கடத்தப்பெரும் DDT மேல் நிலையில் இருக்கும் உயிரினங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

உணவு சங்கிலியில் ஆகபெரும் மேல்நிலையில்,கடைசியில் அது முற்றுப்பெறும் இடத்தில்  உள்ள உயிரினம் எது தெரியுமா?

மனித இனம்!

DDT யை பற்றிய உண்மைகள் இன்னும் தொடரும்........

Wednesday, June 19, 2013

கம்பம் பள்ளத்தாக்கும் கண்ணகி கோவில் பயணமும்.....பகுதி-3

கம்பம் பள்ளத்தாக்கின் ஓங்கி உயர்ந்த மலை சிகரத்தின் மீது அமைந்துள்ளது  கண்ணகி கோவில்.இங்கிருந்து பார்த்தால் கம்பம் நகரின் அழகு , சுற்று புறங்களின் அழகு நம்மை சொக்கவைக்கின்றது. முல்லை பெரியார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் முல்லை பெரியார் அணைக்கட்டு இங்கிருந்து தெரிகின்றன. 

மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருந்தார்கள்.மலை குன்றின் ஒரு பகுதியில் பாதை ஒன்றை கயிறு கட்டி இருபுறமும் தென்னங்கீற்றுகளால் அலங்கரித்து பாதை ஏற்படுத்தி இருந்தார்கள். இந்த பயணத்தில் குமுளியில் இருந்து வரும்போது கேரளா வனப்பகுதியில் புகைப்படம் எடுப்பதில் உள்ள தடைபோல இங்கு ஏதுவும் இல்லைஇங்கு நீங்கள் கோவிலின் உள்ளும் ,வெளியிலும் எங்கு வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம். நாங்கள் சென்ற அன்று ,மிதமான குளிர், உயரமான மலை சிகரம், தொட்டு செல்லும் மேக கூட்டம், சுற்றிலும் எங்கு பார்த்தாலும் புல் வெளிகள் என்று  ஒரு விதமான தெய்வீக நிலையில் கண்ணகியை தரிசிக்க நடந்தோம்.


கண்ணகி கோவில் 

கண்ணகி கோவில் 

கண்ணகி கோவில் 

கண்ணகி கோவில் - கர்பகிரகம் 

கண்ணகி கோவில் -கண்ணகி தவம் இருந்த குகைக்கு போகும் வழி 
கண்ணகி கோவில் 
கோவில் சிதிலமடைந்து கிடக்கிறது , ஒரு சில கோவிலின் மாடங்கள் மட்டும் இன்னும் நிலைத்து நிற்கின்றன.யாரும் அற்ற நாட்களில் இந்த கோவிலின் உள் யானை , சிறுத்தை, புலி என்று காட்டு மிருகங்கள் வாசம் செய்யும் என்று ஒரு வனக்காவலர் தெரிவித்தார். கோவிலில்  தற்காலிக ஏற்பாடாக புல்வெளிகளை செதுக்கி சீரமைத்து இருந்தார்கள். ஒரு பத்து பேரில் ஆறு பேர் கேரளா மக்களாகவே இருந்தார்கள். கோவிலில் இன்று மட்டும் ஒரு துர்கை அம்மனின் உலோகசிலையை வைத்து பூஜை செய்து மக்களுக்கு பிரசாதம் தருகிறார்கள் .
உண்மையான கண்ணகி சிலை -சிதிலமடைந்து உள்ளது 
கோவிலில் சற்று நேரம் அமர்ந்திருந்த போது , ஒரு பெரியவர் கம்பத்தை சேர்ந்தவர் சிதிலமடைந்து மேடாகி கிடக்கும் ஒரு இடத்தில ஒரு உடைந்த கற் சிலையை நிற்க வைத்து பூஜை செய்ய குடும்பத்துடன் தயாராகி இருந்தார். அவரிடம் பேசிய போது அந்த கற்சிலை தான் உடைந்த கண்ணகியின் விக்ரகம், மூலவர் சிலை என்றும் அது கோவில் சிதலமடைந்த போது உடைந்து விட்டது என்றும் சொன்னார். வருட வருடம் வந்து இந்த சிலைக்கு பொங்கலிட்டு பூஜை செய்வதாக சொன்னார் . கிட்ட தட்ட 1975ஆம் ஆண்டில் இருந்து இங்கு வருவதாக சொன்னார். மேலும் என்னை அழைத்து சென்று கேரளா வனதுறையினால் துணியால் மூடப்பெற்ற தமிழ் கல்வெட்டுகளை காட்டினார். நமது கண்ணகி வழிபாடு நம்மை விட்டு கேரள அரசின் கைக்கு போய்விட்டதாக மிகவும் வருந்தினார் .அவருடன் பூஜையில் கலந்து கொண்டு , சிறிது தூரத்தில் கண்ணகி தவம் செய்த இடம் என்று வணங்கப்பெறும் சிறிய கற்பகிரகத்தில் நுழைந்தோம் . குகைப் போன்ற இடமாக அது காட்சியளித்தது. இந்த இடத்தில் தான் கண்ணகி தவம் செய்து,கோவலன் விண் தேரில் வந்து கண்ணகியை அழைத்து சென்ற இடம்.

கண்ணகி கோவிலில் ஒரு மணி நேரம் செலவழித்து பின்பு வெளியே வந்தோம் , அங்கு கம்பம் கண்ணகி கோயில் வழிபாட்டு மன்றத்தை சேர்ந்தவர்கள் அன்னதானம் செய்து கொண்டிருந்தார்கள் . உணவு மற்றும் குடிநீர் வசதிகள் மிக நன்றாக செய்திருந்தார்கள் . அங்கு உணவு வாங்கி சாப்பிட்டுவிட்டு மலையில் இருந்து இறங்கி செல்லும் முடிவுடன் வழியை நோக்கி நடந்தோம். முதல் மலை, இரண்டாம் மலை ஒன்றும் அவ்வளவு கடினமாக  இல்லை என்னெனில் அவை கோவிலின் தளத்தில் அளவிலயே இருந்தன .
பளியன்குடியில் இருந்து தமிழக   பக்தர்கள் நடந்து செல்லும்  மலைப்பாதை

பளியன்குடியில் இருந்து தமிழக   பக்தர்கள் நடந்து செல்லும்  மலைப்பாதை

பளியன்குடியில் இருந்து தமிழக   பக்தர்கள் நடந்து செல்லும்  மலைப்பாதை

பளியன்குடியில் இருந்து தமிழக   பக்தர்கள் நடந்து செல்லும்  மலைப்பாதை

பளியன்குடியில் இருந்து தமிழக   பக்தர்கள் நடந்து செல்லும்  மலைப்பாதை

நடைபயணத்தின் பாதி வழியில் -நடுவில் உள்ள மலையில் தெரியும்  மரம் அருகில் கோவில்

நடைபயணத்தின் பாதி வழியில் -நடுவில் உள்ள மலையில் தெரியும்  மரம் அருகில் கோவில்
இரண்டாம் மலையில் இறங்கும் போது பயமாக இருந்தது, என்னெனில் மிக செங்குத்தாக  இருக்கிறது, வழி என்று ஒன்று இல்லை , செடி கொடிகளை  கொண்டு மிக மெதுவாக இறங்கவேண்டும் . ஆனால் கீழிருந்து மேலே வரும் சிறுவர் ,சிறுமிகள் மற்றும் வயதானவர்களை பார்க்கும்போது நமக்கு சோர்வு ஏற்படுவது இல்லை.

இரண்டாம் மலையில் இருந்து இறங்கி மூன்றாவது மலைக்கு செல்லும் பாதை முழுவதும் காற்று சுற்றி சுற்றி அடிக்கிறது . மிக அருமையான அனுபவம். நான்காவது மலையில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடக்க வேண்டி இருக்கிறது. இங்கு மட்டுமே சமதளத்தில் இந்த பயணத்தில் நடந்தோம். எங்குமே குடிதண்ணீர் வசதி இந்த தமிழகத்தில் இருந்து நடந்து செல்லும் வழியில் இல்லை. குழந்தைகள் குடிதண்ணீர் இல்லாமல் அவதிப்படுவது காண மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அங்கு பணியில் இருந்த ஒரு தமிழக காவல் துறையின் காவலர் ஒருவரும் எங்களுடன் சேர்ந்து கீழே இறங்குவதற்கு வழித்துணையாக வந்தார்.அவரிடம் பேசிய பொழுது தமிழகத்தின் கடைசி எல்லையில் மிக சரியாக கண்ணகி கோவில் அமைந்து இருப்பதாகவும் , தமிழகத்தில் இருந்து வழி அமைப்பது மிக கடினமான காரியம் என்றும் கூறினார். பாதை இருப்பதாலேயே கேரளா அந்த கோவிலுக்கு சொந்தம் கொண்டாடுவதாக கூறி , தமிழர்களும் , தமிழக அரசும் இதற்காக நடவடிக்கை ஏதும் எடுக்க வில்லை என்று வருத்தப்பட்டார். எங்களுக்கும் மிக வருத்தமாக இருந்தது ,கண்முன்னே ஒரு வரலாறு ,நமது மரபு மலையாளிகளின் கைகளுக்கு மாற்றப்பெற்றுகொண்டிருக்கிறது . 

சிறிது தூரத்தில் ஆரம்பிகின்றது வனப் பகுதியில் ஒற்றையடி பாதையில் நமது பயணம் . சுற்றிலும் சில் வண்டுகள் சத்தம் கேட்டுகொண்டே இருக்கிறது. இந்த சித்திரை நாளுக்கு இரு வாரங்கள் முன்பே வெடிகளை வெடித்து வனத்தில் உள் பகுதிக்கு மிருகங்களை விரட்டி விடுவார்கள் எனவே பயமின்றி நடந்து செல்லலாம். மிருகங்கள் நீர் அருந்தும் சிறிய நீர்நிலை ஒன்றை கடந்து சென்றோம்.
நடந்துசெல்லும் ஒற்றையடி பாதை

நடந்துசெல்லும் ஒற்றையடி பாதை

 கம்பம் பள்ளத்தாக்கின் அழகான காட்சி ...  

 கம்பம் பள்ளத்தாக்கின் அழகான காட்சி ...  
அடர்ந்த  காடுகளுக்கு நடுவே பக்தர்களுக்கு உதவி செய்யும் காவலர்கள் 

நடந்துசெல்லும் ஒற்றையடி பாதை


நடந்துசெல்லும் ஒற்றையடி பாதை

நடந்துசெல்லும் ஒற்றையடி பாதை
ஒற்றையடி பாதை சிறிது தூரம் போன பின்பு செங்குத்தாக இறங்கும் வழியாக மாறுகிறது . சுமார் 1 கிலோ மீட்டர் சறுக்கும் பாதையாகவே நீள்கிறது . மிகுந்த தண்ணீர் தாகத்துடன் தவித்த போது ஒரு காட்டு  சுனை ஒன்றில்  நீர் அருந்தினோம் . இந்த காட்டு சுனை அமைந்துள்ள இடத்திலிருந்து   ஒரு அரை மணி நேரம் நடந்தால் பளியன்குடி அடிவாரத்தை அடையலாம். கடைசி ஒரு மணி நேர பயணம் இந்த செங்குத்து சறுக்கு பாதை வழியாகவே செல்கிறது . நன்றாக சுற்றுப்புறத்தை கவனித்து வந்தால் எதிர்வரும் ஒரு அழகான ஒரு வளைவில் நீங்கள் கம்பம் பள்ளத்தாக்கின் அழகு முழுவதும் கண்டு ரசிக்கலாம்.

 இந்த பயணம் பளியன்குடி அடிவாரத்தை அடைந்ததும் அங்கு தமிழக சுகாதாரத்துறை மற்றும் அரசு அதிகாரிகள் நீராகாரம் தந்து நம்மை வரவேற்கிறார்கள். இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று உண்டு கேரளாவில் இருந்து மக்கள் நிறையபேர் வந்தாலும் அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் சொல்ப்பேச்சை கேட்டு அதன் படியே நடக்கிறார்கள் . ஆனால் தமிழகத்தில் இருந்து வரும் இளைஞர்கள் அதிகாரிகளை மதிப்பதே இல்லை . வனத்துறை அதிகாரிகள் ஒரு மலைக்குன்று வழியாக செல்ல முடியாது அது ஆபத்தான மரண பள்ளத்தாக்கு என்று சொல்லியும் கூட 20 இளைஞர்கள் வன காவலர்களுக்கு தெரியாமல் அந்த மலைக்குன்றின் வழியாக இறங்கி சிறிது தூரத்தில் வழியே இல்லாமல் போக இவர்கள் செய்த காரியம் செடி,கொடிகளுக்கு தீ வைத்து விட்டனர் . சிறிது நேரத்தில் மலையின் ஒரு பகுதியில் காட்டுதீயாக பரவியதை கண்டோம் . இப்படி அதிகாரிகளை மதிக்காமல் செயல்படும் இளைஞர்கள் , அவர்களை கட்டுப்படுத்த போராடும் அதிகாரிகள் என்று இன்னொரு பக்கத்தையும் அங்கு கண்டோம். 


பளியன்குடி வந்தவுடன் நீராகாரம் அருந்திவிட்டு பின்பு அங்கிருந்து கூடலூருக்கு செல்லும் சிறப்பு பேருந்தில் ஏறி கூடலூர் வந்து ,கம்பம் பேருந்தின் மூலம் கம்பம் வந்தடைந்தோம். ஒரு நீண்ட ,மகிழ்வான ஒரு நாள் பயணம் முடிவடைந்தது. மீண்டும் அடுத்த சித்திரை முழுநிலவு நாளை எதிர் நோக்கி காத்திருக்கிறது எங்கள் மனது ...


நீங்கள் இந்த பயணம் செல்ல விரும்பினால் செய்ய வேண்டியவை :-
# கம்பம் நகரிலேயே ஜீப்பின் மூலம் செல்ல முடிவு செய்து விடுங்கள்.அதிகாலை 5 மணிக்கு நீங்கள் செல்ல ஆயத்தமாகவேண்டும்.
#குமுளி செல்வதாக முடிவு செய்தீர்களானால் அதிகாலை 5 மணிக்கு அங்கு இருபதாக உங்கள் பயணத்திட்டம் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.
#சொந்த வாகனங்களை அனுமதிக்கமாட்டார்கள் , எனவே அதை தவிர்க்கவும்.
# பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்கவும் , கேரி பேக் உட்பட. நாங்கள் குமுளியில் திராட்சை வாங்கி சென்றிருந்தோம் . குமுளியில் கேரள வனத்துறை சோதனை சாவடியில் அதை வாங்கிக்கொண்டு செய்தித்தாளில் திராட்சையை கட்டி கொடுத்தார்கள். அந்த அளவிற்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க சோதனை செய்தார்கள்.
# மலையில் ஏறி செல்வதற்கு திட்டம் வைத்திருந்தீர்களானால் தகுந்த முன் ஏற்பாடுகளை செய்து கொள்ளவும். தண்ணீர் நிறைய எடுத்து செல்லவும். இல்லை எனில் நீர் சத்து நிறைந்த பழங்களை வாங்கி செல்லவும்.
# ஆர்வம் இல்லாவிட்டால் மலை ஏறவேண்டாம், இறங்க வேண்டாம் . பாதியில் முடியாமல் போனால் திரும்பிபோவது கடினம். குழந்தைகள்,பெண்கள் என ஆர்வம் இருக்கும் எவரும் மலை ஏறலாம் ,இறங்கலாம். என்னை பொறுத்தவரை மலையில் இறங்குவது இங்கு நல்லது. குழந்தைகளை கூட்டி  சென்றால் மிக புதிதான அனுபவம் அவர்களுக்கு கிடைக்கும். ஆர்வம் ஒன்றுதான் இங்கு மிக முக்கியம் .
#பயணத்தில் பயம் எதுவும் இல்லை . ஆங்கங்கே மருத்துவ குழுவினர், காவலர்கள் ,வன துறையினர் கண்காணித்து கொண்டே நம்மை வழிநடத்துகின்றனர். மிகவும் நட்புடன் நமக்கு தேவையான உதவிகளை, தகவல்களை தருகிறார்கள் .  வனத்துறையினர் , மற்றும் காவலர்களுக்கு இங்கு வரும் பக்தர்கள் எந்தவித ஆபத்துகளுக்கும் ஆட்படாமல் பத்திரமாக ஊர் திரும்பவேண்டும் என்று மலை பகுதியில் கூட இன்று மட்டும் பணி புரிகின்றனர் . அவர்களுக்கு மிக்க நன்றி .


இது நமது வரலாறு,பண்பாடு. இவ்வளவு மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயும் மக்களுக்கு வழிகாட்டி ,அன்ன தானம் செய்து பக்தர்களின் கண்ணகி வழிபாட்டிற்கு பெரும் தொண்டு செய்யும் தமிழகத்தை சார்ந்த கண்ணகி கோவில் வழிபாட்டு குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி .

என் தனிப்பட கருத்து என்னவென்றால் இந்த பயணம் மிகவும் புதுமையான அனுபவத்தை தரக்கூடியது . ஒரு முறையேனும் இந்த கண்ணகி வழிபாட்டு பயணத்தை பயணித்து தமிழர்களின் வரலாற்றை காக்கவேண்டும்.

Saturday, June 15, 2013

கம்பம் பள்ளத்தாக்கும் கண்ணகி கோவில் பயணமும்.....பகுதி-2

கம்பம் நகரில் நாங்கள் ஜீப்பில் கிளம்புவதற்கு காலை 5:30 ஆகிவிட்டது. நிறைய ஜீப்புகள் அங்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர் . இங்கிருந்து கண்ணகி கோவிலுக்கு செல்ல 75 ருபாய் வாங்கினார் எங்கள் ஜீப் ஓட்டுனர். பின்பு தெரிந்தது அது நியாயமான,குறைவான கட்டணமே. கம்பம், கூடலூரில் தமிழ்நாடு சோதனை சாவடியில் பெர்மிட் வாங்கிக்கொண்டு குமுளி சென்றோம்.எங்களது முதல் நாள் திட்டமானது முதலில் குமுளி சென்று பின்பு அங்கிருந்து கண்ணகி கோவிலுக்கு செல்வது. கம்பத்தில் இருந்து ஜீப்பில் சென்றது எங்களது அதிர்ஷ்டம் என்ற எண்ணம் குமுளியில் பக்தர்கள் கூட்டத்தை கண்டவுடன் ஏற்பட்டது. 

கேரளா அரசு நிறைய சிறப்பு பேருந்துகளை இயக்கி கேரளாவின் சுற்று வட்டாரத்தில் இருந்து பக்தர்களை திரட்டியிருந்தனர் . நாங்கள் நேராக குமுளி சென்றிருந்தால் கண்டிப்பாக குறைந்தது 4 மணி நேரம் வாகனத்திற்கு காத்திருக்க நேர்ந்திருக்கும். குமுளியில் இருந்து வனத்துறை அனுமதி வாங்கியபின் அங்கிருந்து வனத்துறை சோதனை சாவடியில் வாகனம் முழுமையும் சோதனை செய்தார்கள். எத்தனை பெண்கள், ஆண்கள் , குழந்தைகள் என்று முழுமையான சோதனை. பிளாஸ்டிக் பொருட்களை வாங்கிக்கொண்டார்கள் , குடிதண்ணீர் பாட்டில்கள் என்று எதையும் விடவில்லை. கூடவந்திருந்தவர் ஒரு எலேக்ட்ரிசியன் அவர் சட்டையில் சொருகி இருந்த டெஸ்ட்டர் கூட அவர்களிடம் தப்பவில்லை. குழந்தைகளை கூட்டிவந்தவர்களுக்கு மட்டும் குடிதண்ணீர் பாட்டில்கள் அனுமதி.மிக சிறந்த ஏற்பாடு. தீப்பெட்டி, சிகரெட் என்று எதையும் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.10 அடிக்கு ஒரு காவலர் வீதம் ,வனத்தினுள் 50 மீட்டர் அளவில் ஒருவர் என்று கேரளா வனத்துறை பாதுகாப்பிற்கு ஏற்ப்பாடு செய்திருந்தனர் . இதில் குறிபிடத்தக்க விஷயம் என்னவென்றால் கேரளா அரசு நமது கண்ணகியை மங்கள தேவி என்றே அழைத்து கண்ணகி வழிபாட்டை துர்க்கை வழிபாடாக மாற்றி கொண்டிருக்கிறார்கள் . குமுளியின் சுற்று வட்டாரத்திற்கு சிறப்பு பேருந்துகள் ஏற்ப்பாடு செய்த கேரளா போக்குவரத்து துறை தப்பி தவறி கூட தமிழகத்தில் ஒரு பேருந்து கூட இயக்கவில்லை .

 தமிழகத்தில் இருந்து ஒரு மலைப்பாதை மட்டுமே நடக்ககூடிய ஒற்றையடி பாதையாக இருக்கிறது. மலை ஏறுவது மிக சிரமம் நகரத்தில் வசிக்ககூடியவர்களுக்கு .கிட்டத்தட்ட 4 மலைகள் கடந்து செல்லவேண்டும் ,தமிழகத்தில் இருந்து செல்வதென்றால். ஆனாலும் சிறு வயது ஏன் கைக்குழந்தைகளை கூட தூக்கிக்கொண்டும் ஆண்கள்,பெண்கள் மற்றும் , வயதான பாட்டிகள் , தாத்தாக்கள் கூட மலை ஏறுவதை கண்டேன். கம்பத்தில் இருந்து கூடலூர் கடந்து வலதுபுறம் செல்லும் பளியன்குடி சென்றால் அங்கிருந்து ஒரு ஒற்றையடி பாதை செல்கிறது. மிக கடினமாகவும் , நீண்ட நேரம் செல்லும்படியும் இருப்பதால் சற்று வயதானவர்கள் ,பெண்கள் நீண்ட தூரம் நடக்க சிரமப்படுபவர்கள் இதை தவிர்க்கவும்.  பளியன்குடியில் இருந்து நீங்கள் மலையேறினால் ,எப்படி பார்த்தாலும் கிட்டத்தட்ட 5 மணி நேரங்களுக்கு குறையாது. எங்களது திட்டமானது போகும்போது ஜீப்பில் சென்றும் வரும்போது மலைப்பாதையில் இறங்கி வரும்படியும் அமைத்துக்கொண்டோம் .

 மீண்டும் ஜீப்பில் என்னுடன் பயணியுங்கள்....ஒரு கால்மணி நேர மலைப்பயணம், சற்றே மேடு,பள்ளமுமான சாலை அடர்ந்த வனப்பகுதி என்று இந்த பயணம் நீண்டது . இந்த பயணத்தில் கேரளா வனப்பகுதியில் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை . வாகனத்தை நிறுத்தக்கூட அனுமதி இல்லை. கேரளத்தின் வனத்துறை காவலர்கள் கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள் .தனியார் வாகனங்களுக்கு கண்டிப்பாக அனுமதி மறுக்கப்படுகிறது . ஜீப்புகளுக்கு மட்டும் அனுமதி அதுவும் குமுளியில் வனத்துறை அனுமதி பெற்றால் மட்டுமே. சொந்த வாகனங்கள் ,இரு சக்கர வாகனங்கள் என்று எதற்கும் அனுமதி இல்லை .

 அரை மணி நேர பயணத்திற்கு பின்....


திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச் செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும்

அசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும் அழகுதனைக் கண்டேன் நல்லின்பங் கண்டேன்.
 பசையுள்ள பொருளிலெலாம் பசையவள் காண்! பழமையினால் சாகாத இளையவள் காண்!
 நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்! நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.

 பிரமாண்டம் .இந்த சொல்லை தவிர ஏதும் என் வர்ணனைகளுக்கு பொருந்தாது. நான் கண்ட முதல் காட்சி .மிக பிரமாண்டமான மலையின் மீது நீங்கள் இருக்கிறீர்கள் . அழகின் தரிசனம் , ஓங்கி உயர்ந்த மலைகளின் மீது உங்கள் சாலை பயணம் இன்னும் 10 நிமிடங்கள் தொடர்கிறது. மனம் மிக ஆவலாக இருக்கிறது மலையின் உச்சியை காண , கண்ணகி கோவிலை காண...

 கோவிலுக்கு செல்லும் வழி 

கோவிலை சுற்றி புல்வெளிகள் 

நீண்ட பயணப்பாதை ..கோவிலின் அருகிலிருந்து 

பிரமாண்டமான ஒரு மலைக்குன்று

நீண்ட பயணப்பாதை ..கோவிலின் அருகிலிருந்து 

நீண்ட பயணப்பாதை ..கோவிலின் அருகிலிருந்து 

 மலைக்குன்று ,அழகான ஒரு காட்சி 



பகுதி மூன்றில் கண்ணகி கோவிலின் தரிசனம் பற்றி விரிவாக எழுதுகிறேன் ...உங்கள் விமரிசனங்கள்,கருதுக்கள் தேவை.....

Wednesday, June 12, 2013

கம்பம் பள்ளத்தாக்கும் கண்ணகி கோவில் பயணமும்.....

என்னுடைய முதல் பதிவு மிக நீண்ட நாட்களாக தள்ளி தள்ளி போய்கொண்டிருந்தது எழுதப்படுவதற்கு , ஏனெனில் இந்த பயண கட்டுரையை தான் எழுத வேண்டும் என்று விரும்பியதே காரணம் .

 பாண்டிய மன்னன் உண்மையை அறியாமல் கோவலனை கொன்றுவிட்டபின் அவனுடன் வாதம் புரிந்து உண்மையை எடுத்துரைத்தாள் கண்ணகி . பின்பு மதுரையில் உள்ள சான்றோர், குழந்தைகள் , மிருகங்கள் ஆகியவற்றை தவிர்த்து அனைத்தையும் எரித்து சாம்பலாகும்படி சாபம் விட்டாள் .பின் மதுரையை விட்டு வெளியேறி வைகை ஆற்றின் தென்கரை வழியாக நடந்து சென்று பதினாலு நாட்கள் கடந்து சேரநாட்டு எல்லையான விண்ணோத்திப் பாறை வந்தடைகிறாள்.


 இங்கு வசித்து வந்த குன்றக் குறவர்கள் என்று அழைக்கப்பட்ட பளியர்கள் ஆடிய குன்றக் குறவை நடனத்தினைப் பார்த்து அவளது கோபம் குறைகிறது. அவர்களிடம் தன வாழ்க்கையையும் தனக்கு நேர்ந்த துன்பத்தையும் சொல்லி வருந்துகிறாள். அப்போது விண்ணில் பிரகாசமான ஒளி தோன்ற அவ்வொளிக்கிடையே தேவர்களுடன் தோன்றிய கோவலன் கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து அழைத்துச் சென்றதால் மங்கலதேவி என்ற பெயர் பெற்றாள்.


 இதைக் கண்டு வியப்படைந்த குன்றத்துக் குறவர்கள் முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சேரநாட்டின் மன்னன் செங்குட்டுவனிடம் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் கூறினர். இதை விசாரித்து அறிந்த மன்னன் சேரன் செங்குட்டுவன் அந்த இடத்தில் கண்ணகிக்கு கோயில் ஒன்றைக் கட்டினான். இந்த கண்ணகி கோயில் அமைந்துள்ள பகுதி மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்று அழைக்கப்படுகிறது. 


2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த கோவில் ,இங்கு சென்று வந்ததை இந்த பதிவில் எழுதுகிறேன் .

என்னுடைய பயணம் சித்திரை முழுநிலவு நாளுக்கு முன்தினம் தொடங்கியது . சித்திரை முழுநிலவுக்கு முதல் நாள் மதியம் 2மணியளவில் கம்பம் நகருக்கு வந்தடைந்தேன் . அங்கு ஜாபர் இன்டர்நேஷனல் ஹோடேலில் அறை பதிவு செய்திருந்தேன் . கம்பம் நகரில் உள்ளபடியே சிறந்த தங்கும் விடுதி. விடுதி வந்தடைந்தவுடன் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு சுருளி அருவிக்கு சென்றோம் நானும் என் நண்பரும் . சுருளி அருவி கம்பம் நகரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது . ஒரு மணிக்கு ஒரு முறை மினி பஸ் கம்பம் பேருந்து நிலையத்திற்கு சிறிது தூரத்தில் இருந்து புறப்படுகிறது . பேருந்து நிலையம் சென்று ஏமாற வேண்டாம் . யாரிடமாவது விசாரித்து பஸ் புறப்படும் இடத்தை அடையலாம். 


அங்கிருந்து சுருளி அருவி க்கு சென்றால் அருவிக்கு அரை கிலோமீட்டர் முன்பே நமது வாகனங்களை நிறுத்திவிடவேண்டும் . பின்பு வனத்துறை சாலை வழியாக அருவிக்கு செல்ல வேண்டும்.வாகனங்கள் நிறுத்தும் இடம் அருகில் சிறிய கடைகள் இருக்கின்றன தேவையான சோப்பு ,ஷாம்பூ ஆகியவற்றை இங்கு வாங்கிகொள்ளலாம். இங்கு இளநீர் , கொய்யாபழம் போன்றவைகளும் கிடைகின்றன. சுருளி அருவியில் நாங்கள் சென்றிருந்த நேரத்தில் மிக சிறிதளவு தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது .இருந்தாலும் குளிப்பதற்கு போதுமானதாகவே இருந்தது .


 



சுருளி அருவியில் கவனிக்கப்பட வேண்டியவை .
 # ஆண்களுக்கு தனி இடம் மற்றும் பெண்களுக்கு தனி இடம் குளிப்பதற்கு இட வசதி உள்ளது .உடை மாற்றும் அறை பெண்களுக்கு தனியாக உள்ளது.அறைக்கு போகும் பாதை முழுவதும் ஈரமாக இருக்கும் என்பதால் கவனமாக நடக்க வேண்டும்.

 # இந்த மாதிரி ஏகாந்தமாக இருக்கும் அருவியை கண்டவுடன் இளைஞர்களுக்கு ஆர்வம் ஏற்படுவது என்பது இயல்பு என்றாலும் , இயற்கைக்கு முன்பு மனிதசக்தி ஈடு கொடுக்க ஒன்றுமே இல்லை என்பதை அறிந்து அருவிக்கு செல்வது ,முறையான இடத்தில குளித்து வருவது மட்டுமே உன்னதமான அனுபவத்தை கொடுக்கும்.


 # அருவிக்கு மேலே செல்லுவது போன்ற அபாயகரமான செயல்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் . காலம் காலமாக நீர் ஓடி ஓடி வழுக்கும் பாறையாக அனைத்தும் மாறி இருக்கிறது . எனவே முறையற்ற செயல்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.குழுவாக செல்பவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது இது. பொது மக்கள் செல்லும் இடங்களுக்கு மட்டுமே செல்லுங்கள்.குழுவின் உறுப்பினர்கள் எவராவது வீர தீர செயல்களில் இறங்கும் நடவடிகையை கண்டால் கண்டிப்புடன் அதை தவிர்க்கசொல்லுங்கள் , இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த காரணம் இது போன்ற அருவிகளில் நடக்கும் மரணங்கள் மட்டுமே. அப்படி ஒரு மரணத்தை கண்டதால் தான் இந்த அறிவுரை.


தயவு செய்து இன்ப சுற்றுலா செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர வேறு எங்கும் சென்று தங்களது ஆர்வத்தை காட்டுவதுஎன்பது சிறிது கவனம் பிசகினாலும் உங்களுடன் வந்திருக்கும் அனைவருக்கும் தீராத மனக்கவலையை தரும் .எனவே எச்சரிக்கை .


#வனத்துறை சோதனைசாவடியில் இருந்து அருவிக்கு போகும் பாதையில் நிறைய குரங்குகள் இருக்கின்றன . உணவு பொட்டலங்களை பாதுகாப்பாக எடுத்து செல்லவும். 

# சுருளிப்பட்டியில் இருபுறமும் திராட்சை தோட்டங்கள் உள்ளன .சில தோட்டங்களில் அங்கேயே திராட்சை விற்பனை நடைபெறுகிறது. தோட்டங்களில் வாங்குவதால் விலை கொஞ்சம் குறைவு.

  
 சுருளி அருவியில் இருந்து அறைக்கு திரும்பி சிறிது ஓய்விற்கு பின் அருகில் இருந்த கம்பராயர் பெருமாள் கோவிலுக்கு சென்றோம்.கம்பம் செல்பவர்கள் தவறவிடகூடாத கோவில் இது . இந்த கோவிலால்தான் கம்பம் என்ற பெயரே வந்ததாக வரலாறு. கோவிலுக்கு சென்று வந்தபின் இரவு உணவுக்கு அருகில் இருந்த உணவு விடுதிக்கு சென்றோம். ஹோட்டலில் உணவு வசதிகள் உண்டு , அறைக்கே வந்து தருகிறார்கள் . இருந்தாலும் கம்பம் நகரின் உணவின் சுவையை அறிய வெளியில் சென்றோம், நிறைய உணவு விடுதிகள் அருகிலயே இருக்கின்றன. நாங்கள் சென்ற உணவு விடுதி மிக சிறியது விறகு அடுப்பில் இட்லி சூடாக கிடைத்தது , அயிரை மீன் குழம்பு தனியாக விற்கிறார்கள். மிக அருமையான சுவையில் இருந்தது.

பின் அறைக்கு திரும்பினோம். சித்திரை முழுநிலவு நாளில் மட்டுமே தரிசிக்க அனுமதி உள்ள கண்ணகி தெய்வத்தை பார்க்கும் ஆவல் எழுந்தது ,அதிகாலை 4 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு விடுதியின் முன் நெடுஞ்சாலையில் நின்றிருந்தோம் .கம்பம் நகரில் இருந்து நிறைய ஜீப்புகள் செல்கின்றது. சிறந்த ஏற்பாடுகளை கம்பம் நகரின் கண்ணகி கோயில் வழிபட்டு குழுவினர் செய்திருந்தனர் . புதிதாக செல்பவர்கள் கம்பம் நகரிலேயே ஜீப் மூலமாக செல்வது மிக வசதியானது . குமுளி சென்றால் வாகன ஏற்பாட்டுக்கு மிகுந்த நேரம் ஆகும் . கம்பம் நகரிலேயே ஜீப்பில் செல்வது புத்திசாலித்தனம் . 

 சில குறிப்புகள் :-

 # கண்ணகி கோவில் ஒரு ஆண்டில் சித்திரை முழுநிலவு நாளுக்கு மட்டுமே பொதுமக்கள் வழிபட அனுமதி.ஏன் என்றால் பாதுகாக்கபட்ட வனத்தில் அமைந்துள்ளது. 

#தமிழகத்திற்கு சொந்தமான கோவில் இது, ஆனால் சாலை வசதி குமுளி ,கேரளா வழியாக மட்டுமே வாகனம் செல்லும் சாலை உள்ளது. 


#தமிழகத்திற்கு சொந்தமான கோவிலை அதன் உரிமையை கேரளா சமீப காலமாக மறுத்து வருகிறது .கோவிலின் பட்டா இந்த கோவில் தமிழகத்தில் உள்ளதை காட்டுகிறது. 


#கோவிலில் தமிழ் கல்வெட்டுகளை துணி கொண்டு கேரளா வனத்துறை மூடி மூடி வைத்துள்ளதை கவனித்தோம், இதை வருடம் வருடம் வந்து கொண்டிருக்கும் கம்பத்தை சேர்ந்த சிலர் எங்களுக்கு அந்த கல்வெட்டுகளை காட்டினார்கள்.

 #தமிழகத்தின் கற்பு தெய்வமான கண்ணகியை கேரள அரசு மங்கல தேவி என்று மட்டுமே பெயர் மாற்றம் செய்து அழைகிறார்கள் . தமிழகத்தின் வரலாற்றை சிறிது சிறிதாக மாற்றும் முயற்சி .இதை கம்பம் கண்ணகி வழிபாட்டு குழுவினர் முறியடிக்க முயற்சி எடுத்து வழிபாட்டிற்கு நிறைய தமிழர்களை திரட்ட பெரு முயற்சி எடுத்துக்கொண்டு இருகின்றனர் . அவர்களின் முயற்சி கண்டிப்பாக பாராட்ட பட வேண்டிய ஒன்றாகும் .


பகுதி இரண்டில் சித்திரை முழுநிலவின் பகல் பொழுதில் சென்ற பயணத்தை தொடர்கிறேன் ....உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்... 


Thursday, February 2, 2012

அன்புடன் வரவேற்கிறேன்!


என்னுடைய இந்த தளத்திற்கு பார்வையிட வரும் அனைவரையும்
அன்புடன் வரவேற்கிறேன். இது ஒரு தகவல், கருத்து மற்றும் செய்திகளின் பதிவுகள்.  
"என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமையுண்டு ; ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமையுண்டு" என்ற தந்தை பெரியாரின் கருத்துக்களுடன் இந்த முதல் பதிவை எழுதுகிறேன். 

பிடித்த ஒரு கவிதையுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

"கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனிய என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்."

-பாரதிதாசன்.