Wednesday, June 19, 2013

கம்பம் பள்ளத்தாக்கும் கண்ணகி கோவில் பயணமும்.....பகுதி-3

கம்பம் பள்ளத்தாக்கின் ஓங்கி உயர்ந்த மலை சிகரத்தின் மீது அமைந்துள்ளது  கண்ணகி கோவில்.இங்கிருந்து பார்த்தால் கம்பம் நகரின் அழகு , சுற்று புறங்களின் அழகு நம்மை சொக்கவைக்கின்றது. முல்லை பெரியார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் முல்லை பெரியார் அணைக்கட்டு இங்கிருந்து தெரிகின்றன. 

மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருந்தார்கள்.மலை குன்றின் ஒரு பகுதியில் பாதை ஒன்றை கயிறு கட்டி இருபுறமும் தென்னங்கீற்றுகளால் அலங்கரித்து பாதை ஏற்படுத்தி இருந்தார்கள். இந்த பயணத்தில் குமுளியில் இருந்து வரும்போது கேரளா வனப்பகுதியில் புகைப்படம் எடுப்பதில் உள்ள தடைபோல இங்கு ஏதுவும் இல்லைஇங்கு நீங்கள் கோவிலின் உள்ளும் ,வெளியிலும் எங்கு வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம். நாங்கள் சென்ற அன்று ,மிதமான குளிர், உயரமான மலை சிகரம், தொட்டு செல்லும் மேக கூட்டம், சுற்றிலும் எங்கு பார்த்தாலும் புல் வெளிகள் என்று  ஒரு விதமான தெய்வீக நிலையில் கண்ணகியை தரிசிக்க நடந்தோம்.


கண்ணகி கோவில் 

கண்ணகி கோவில் 

கண்ணகி கோவில் 

கண்ணகி கோவில் - கர்பகிரகம் 

கண்ணகி கோவில் -கண்ணகி தவம் இருந்த குகைக்கு போகும் வழி 
கண்ணகி கோவில் 
கோவில் சிதிலமடைந்து கிடக்கிறது , ஒரு சில கோவிலின் மாடங்கள் மட்டும் இன்னும் நிலைத்து நிற்கின்றன.யாரும் அற்ற நாட்களில் இந்த கோவிலின் உள் யானை , சிறுத்தை, புலி என்று காட்டு மிருகங்கள் வாசம் செய்யும் என்று ஒரு வனக்காவலர் தெரிவித்தார். கோவிலில்  தற்காலிக ஏற்பாடாக புல்வெளிகளை செதுக்கி சீரமைத்து இருந்தார்கள். ஒரு பத்து பேரில் ஆறு பேர் கேரளா மக்களாகவே இருந்தார்கள். கோவிலில் இன்று மட்டும் ஒரு துர்கை அம்மனின் உலோகசிலையை வைத்து பூஜை செய்து மக்களுக்கு பிரசாதம் தருகிறார்கள் .
உண்மையான கண்ணகி சிலை -சிதிலமடைந்து உள்ளது 
கோவிலில் சற்று நேரம் அமர்ந்திருந்த போது , ஒரு பெரியவர் கம்பத்தை சேர்ந்தவர் சிதிலமடைந்து மேடாகி கிடக்கும் ஒரு இடத்தில ஒரு உடைந்த கற் சிலையை நிற்க வைத்து பூஜை செய்ய குடும்பத்துடன் தயாராகி இருந்தார். அவரிடம் பேசிய போது அந்த கற்சிலை தான் உடைந்த கண்ணகியின் விக்ரகம், மூலவர் சிலை என்றும் அது கோவில் சிதலமடைந்த போது உடைந்து விட்டது என்றும் சொன்னார். வருட வருடம் வந்து இந்த சிலைக்கு பொங்கலிட்டு பூஜை செய்வதாக சொன்னார் . கிட்ட தட்ட 1975ஆம் ஆண்டில் இருந்து இங்கு வருவதாக சொன்னார். மேலும் என்னை அழைத்து சென்று கேரளா வனதுறையினால் துணியால் மூடப்பெற்ற தமிழ் கல்வெட்டுகளை காட்டினார். நமது கண்ணகி வழிபாடு நம்மை விட்டு கேரள அரசின் கைக்கு போய்விட்டதாக மிகவும் வருந்தினார் .அவருடன் பூஜையில் கலந்து கொண்டு , சிறிது தூரத்தில் கண்ணகி தவம் செய்த இடம் என்று வணங்கப்பெறும் சிறிய கற்பகிரகத்தில் நுழைந்தோம் . குகைப் போன்ற இடமாக அது காட்சியளித்தது. இந்த இடத்தில் தான் கண்ணகி தவம் செய்து,கோவலன் விண் தேரில் வந்து கண்ணகியை அழைத்து சென்ற இடம்.

கண்ணகி கோவிலில் ஒரு மணி நேரம் செலவழித்து பின்பு வெளியே வந்தோம் , அங்கு கம்பம் கண்ணகி கோயில் வழிபாட்டு மன்றத்தை சேர்ந்தவர்கள் அன்னதானம் செய்து கொண்டிருந்தார்கள் . உணவு மற்றும் குடிநீர் வசதிகள் மிக நன்றாக செய்திருந்தார்கள் . அங்கு உணவு வாங்கி சாப்பிட்டுவிட்டு மலையில் இருந்து இறங்கி செல்லும் முடிவுடன் வழியை நோக்கி நடந்தோம். முதல் மலை, இரண்டாம் மலை ஒன்றும் அவ்வளவு கடினமாக  இல்லை என்னெனில் அவை கோவிலின் தளத்தில் அளவிலயே இருந்தன .
பளியன்குடியில் இருந்து தமிழக   பக்தர்கள் நடந்து செல்லும்  மலைப்பாதை

பளியன்குடியில் இருந்து தமிழக   பக்தர்கள் நடந்து செல்லும்  மலைப்பாதை

பளியன்குடியில் இருந்து தமிழக   பக்தர்கள் நடந்து செல்லும்  மலைப்பாதை

பளியன்குடியில் இருந்து தமிழக   பக்தர்கள் நடந்து செல்லும்  மலைப்பாதை

பளியன்குடியில் இருந்து தமிழக   பக்தர்கள் நடந்து செல்லும்  மலைப்பாதை

நடைபயணத்தின் பாதி வழியில் -நடுவில் உள்ள மலையில் தெரியும்  மரம் அருகில் கோவில்

நடைபயணத்தின் பாதி வழியில் -நடுவில் உள்ள மலையில் தெரியும்  மரம் அருகில் கோவில்
இரண்டாம் மலையில் இறங்கும் போது பயமாக இருந்தது, என்னெனில் மிக செங்குத்தாக  இருக்கிறது, வழி என்று ஒன்று இல்லை , செடி கொடிகளை  கொண்டு மிக மெதுவாக இறங்கவேண்டும் . ஆனால் கீழிருந்து மேலே வரும் சிறுவர் ,சிறுமிகள் மற்றும் வயதானவர்களை பார்க்கும்போது நமக்கு சோர்வு ஏற்படுவது இல்லை.

இரண்டாம் மலையில் இருந்து இறங்கி மூன்றாவது மலைக்கு செல்லும் பாதை முழுவதும் காற்று சுற்றி சுற்றி அடிக்கிறது . மிக அருமையான அனுபவம். நான்காவது மலையில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடக்க வேண்டி இருக்கிறது. இங்கு மட்டுமே சமதளத்தில் இந்த பயணத்தில் நடந்தோம். எங்குமே குடிதண்ணீர் வசதி இந்த தமிழகத்தில் இருந்து நடந்து செல்லும் வழியில் இல்லை. குழந்தைகள் குடிதண்ணீர் இல்லாமல் அவதிப்படுவது காண மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அங்கு பணியில் இருந்த ஒரு தமிழக காவல் துறையின் காவலர் ஒருவரும் எங்களுடன் சேர்ந்து கீழே இறங்குவதற்கு வழித்துணையாக வந்தார்.அவரிடம் பேசிய பொழுது தமிழகத்தின் கடைசி எல்லையில் மிக சரியாக கண்ணகி கோவில் அமைந்து இருப்பதாகவும் , தமிழகத்தில் இருந்து வழி அமைப்பது மிக கடினமான காரியம் என்றும் கூறினார். பாதை இருப்பதாலேயே கேரளா அந்த கோவிலுக்கு சொந்தம் கொண்டாடுவதாக கூறி , தமிழர்களும் , தமிழக அரசும் இதற்காக நடவடிக்கை ஏதும் எடுக்க வில்லை என்று வருத்தப்பட்டார். எங்களுக்கும் மிக வருத்தமாக இருந்தது ,கண்முன்னே ஒரு வரலாறு ,நமது மரபு மலையாளிகளின் கைகளுக்கு மாற்றப்பெற்றுகொண்டிருக்கிறது . 

சிறிது தூரத்தில் ஆரம்பிகின்றது வனப் பகுதியில் ஒற்றையடி பாதையில் நமது பயணம் . சுற்றிலும் சில் வண்டுகள் சத்தம் கேட்டுகொண்டே இருக்கிறது. இந்த சித்திரை நாளுக்கு இரு வாரங்கள் முன்பே வெடிகளை வெடித்து வனத்தில் உள் பகுதிக்கு மிருகங்களை விரட்டி விடுவார்கள் எனவே பயமின்றி நடந்து செல்லலாம். மிருகங்கள் நீர் அருந்தும் சிறிய நீர்நிலை ஒன்றை கடந்து சென்றோம்.
நடந்துசெல்லும் ஒற்றையடி பாதை

நடந்துசெல்லும் ஒற்றையடி பாதை

 கம்பம் பள்ளத்தாக்கின் அழகான காட்சி ...  

 கம்பம் பள்ளத்தாக்கின் அழகான காட்சி ...  
அடர்ந்த  காடுகளுக்கு நடுவே பக்தர்களுக்கு உதவி செய்யும் காவலர்கள் 

நடந்துசெல்லும் ஒற்றையடி பாதை


நடந்துசெல்லும் ஒற்றையடி பாதை

நடந்துசெல்லும் ஒற்றையடி பாதை
ஒற்றையடி பாதை சிறிது தூரம் போன பின்பு செங்குத்தாக இறங்கும் வழியாக மாறுகிறது . சுமார் 1 கிலோ மீட்டர் சறுக்கும் பாதையாகவே நீள்கிறது . மிகுந்த தண்ணீர் தாகத்துடன் தவித்த போது ஒரு காட்டு  சுனை ஒன்றில்  நீர் அருந்தினோம் . இந்த காட்டு சுனை அமைந்துள்ள இடத்திலிருந்து   ஒரு அரை மணி நேரம் நடந்தால் பளியன்குடி அடிவாரத்தை அடையலாம். கடைசி ஒரு மணி நேர பயணம் இந்த செங்குத்து சறுக்கு பாதை வழியாகவே செல்கிறது . நன்றாக சுற்றுப்புறத்தை கவனித்து வந்தால் எதிர்வரும் ஒரு அழகான ஒரு வளைவில் நீங்கள் கம்பம் பள்ளத்தாக்கின் அழகு முழுவதும் கண்டு ரசிக்கலாம்.

 இந்த பயணம் பளியன்குடி அடிவாரத்தை அடைந்ததும் அங்கு தமிழக சுகாதாரத்துறை மற்றும் அரசு அதிகாரிகள் நீராகாரம் தந்து நம்மை வரவேற்கிறார்கள். இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று உண்டு கேரளாவில் இருந்து மக்கள் நிறையபேர் வந்தாலும் அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் சொல்ப்பேச்சை கேட்டு அதன் படியே நடக்கிறார்கள் . ஆனால் தமிழகத்தில் இருந்து வரும் இளைஞர்கள் அதிகாரிகளை மதிப்பதே இல்லை . வனத்துறை அதிகாரிகள் ஒரு மலைக்குன்று வழியாக செல்ல முடியாது அது ஆபத்தான மரண பள்ளத்தாக்கு என்று சொல்லியும் கூட 20 இளைஞர்கள் வன காவலர்களுக்கு தெரியாமல் அந்த மலைக்குன்றின் வழியாக இறங்கி சிறிது தூரத்தில் வழியே இல்லாமல் போக இவர்கள் செய்த காரியம் செடி,கொடிகளுக்கு தீ வைத்து விட்டனர் . சிறிது நேரத்தில் மலையின் ஒரு பகுதியில் காட்டுதீயாக பரவியதை கண்டோம் . இப்படி அதிகாரிகளை மதிக்காமல் செயல்படும் இளைஞர்கள் , அவர்களை கட்டுப்படுத்த போராடும் அதிகாரிகள் என்று இன்னொரு பக்கத்தையும் அங்கு கண்டோம். 


பளியன்குடி வந்தவுடன் நீராகாரம் அருந்திவிட்டு பின்பு அங்கிருந்து கூடலூருக்கு செல்லும் சிறப்பு பேருந்தில் ஏறி கூடலூர் வந்து ,கம்பம் பேருந்தின் மூலம் கம்பம் வந்தடைந்தோம். ஒரு நீண்ட ,மகிழ்வான ஒரு நாள் பயணம் முடிவடைந்தது. மீண்டும் அடுத்த சித்திரை முழுநிலவு நாளை எதிர் நோக்கி காத்திருக்கிறது எங்கள் மனது ...


நீங்கள் இந்த பயணம் செல்ல விரும்பினால் செய்ய வேண்டியவை :-
# கம்பம் நகரிலேயே ஜீப்பின் மூலம் செல்ல முடிவு செய்து விடுங்கள்.அதிகாலை 5 மணிக்கு நீங்கள் செல்ல ஆயத்தமாகவேண்டும்.
#குமுளி செல்வதாக முடிவு செய்தீர்களானால் அதிகாலை 5 மணிக்கு அங்கு இருபதாக உங்கள் பயணத்திட்டம் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.
#சொந்த வாகனங்களை அனுமதிக்கமாட்டார்கள் , எனவே அதை தவிர்க்கவும்.
# பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்கவும் , கேரி பேக் உட்பட. நாங்கள் குமுளியில் திராட்சை வாங்கி சென்றிருந்தோம் . குமுளியில் கேரள வனத்துறை சோதனை சாவடியில் அதை வாங்கிக்கொண்டு செய்தித்தாளில் திராட்சையை கட்டி கொடுத்தார்கள். அந்த அளவிற்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க சோதனை செய்தார்கள்.
# மலையில் ஏறி செல்வதற்கு திட்டம் வைத்திருந்தீர்களானால் தகுந்த முன் ஏற்பாடுகளை செய்து கொள்ளவும். தண்ணீர் நிறைய எடுத்து செல்லவும். இல்லை எனில் நீர் சத்து நிறைந்த பழங்களை வாங்கி செல்லவும்.
# ஆர்வம் இல்லாவிட்டால் மலை ஏறவேண்டாம், இறங்க வேண்டாம் . பாதியில் முடியாமல் போனால் திரும்பிபோவது கடினம். குழந்தைகள்,பெண்கள் என ஆர்வம் இருக்கும் எவரும் மலை ஏறலாம் ,இறங்கலாம். என்னை பொறுத்தவரை மலையில் இறங்குவது இங்கு நல்லது. குழந்தைகளை கூட்டி  சென்றால் மிக புதிதான அனுபவம் அவர்களுக்கு கிடைக்கும். ஆர்வம் ஒன்றுதான் இங்கு மிக முக்கியம் .
#பயணத்தில் பயம் எதுவும் இல்லை . ஆங்கங்கே மருத்துவ குழுவினர், காவலர்கள் ,வன துறையினர் கண்காணித்து கொண்டே நம்மை வழிநடத்துகின்றனர். மிகவும் நட்புடன் நமக்கு தேவையான உதவிகளை, தகவல்களை தருகிறார்கள் .  வனத்துறையினர் , மற்றும் காவலர்களுக்கு இங்கு வரும் பக்தர்கள் எந்தவித ஆபத்துகளுக்கும் ஆட்படாமல் பத்திரமாக ஊர் திரும்பவேண்டும் என்று மலை பகுதியில் கூட இன்று மட்டும் பணி புரிகின்றனர் . அவர்களுக்கு மிக்க நன்றி .


இது நமது வரலாறு,பண்பாடு. இவ்வளவு மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயும் மக்களுக்கு வழிகாட்டி ,அன்ன தானம் செய்து பக்தர்களின் கண்ணகி வழிபாட்டிற்கு பெரும் தொண்டு செய்யும் தமிழகத்தை சார்ந்த கண்ணகி கோவில் வழிபாட்டு குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி .

என் தனிப்பட கருத்து என்னவென்றால் இந்த பயணம் மிகவும் புதுமையான அனுபவத்தை தரக்கூடியது . ஒரு முறையேனும் இந்த கண்ணகி வழிபாட்டு பயணத்தை பயணித்து தமிழர்களின் வரலாற்றை காக்கவேண்டும்.

3 comments:

  1. கணணகி கோயில் செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை கனவு. ஆனால் இன்று வரை செல்ல முடியவில்லை கண்டிப்பாக கூடிய விரைவில் செல்வேன். இக்கட்டுரையை படித்ததும் அங்கு சென்று வந்தது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.

    ReplyDelete
  2. great news sir ,,,,athi pondicherry 9791864857 pls call sir i got a information

    ReplyDelete
  3. இந்த இடத்திற்கு சென்றால் மன நிம்மதியும் மன நிறைவும் கிடைக்கும். ஒரு குழுவாக (குறைந்த பட்சம் 20 பேர்) சென்றால் நன்றாக இருக்கும். தண்ணீர், சிற்றுண்டிகள் போன்றவற்றை தயார் செய்து கொண்டு செல்ல வேண்டும். அனைவரும் கண்டிப்பாக செல்ல் வேண்டிய இடம்

    ReplyDelete